Friday, 19 September 2014

விரதங்களும் அதன் பலன்களும்



ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. 
                            

 

இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

 • சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி பாப மோகினி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறும். 

வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்றும், தேய்பிறை ஏகாதசி வருதித் ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைத்து இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. 

ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி அபார ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். 

ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி சயனி என்றும் தேய்பிறை ஏகாதசி ஏகாதசி யோகினி என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகராக பலன்கள் கிடைக்கப்பெறும்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது புத்ரஜா என்றும், தேய்பிறை ஏகாதசியானது காமிகா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள். 

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா என்றும். தேய்பிறை ஏகாதசி அஜா என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுடை வளரும்.

விரதத்தை கடைப்பிடித்து பெருமாளின் நல்லருள் பெறுவோம்

Monday, 7 July 2014

திருப்பதி பத்மாவதி பிறப்பு

பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.

திருப்பதி திருமலை

திருப்பதி திருமலை

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

திருப்பதி கொலுவு தர்பார்

ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருப்பதி கல்யாண உற்சவம்

திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி வரலாறு, கோயில் நேரம்


திருப்பதி கோயில் நேரம்

காலை 3.30 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். பெயரளவுக்கு அரை மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது.

திருப்பதி வரலாறு

காலை 3.30 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். பெயரளவுக்கு அரை மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது.இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்" கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

இந்தியா வில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி ஒரு மிகப்பெரிய திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆகவே இந்த திருத்தலமும் என்றும் நிரம்பி வழிந்த படியே காட்சியளிக்கும். திரு + பதி திருப்பதி ஆயிகியது திரு என்றால் உயர்ந்த பதிஎன்றால் இறைவன் வாழும் இடம்

தமிழில் திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் லக்ஷ்மியின் (திரு) கணவன் (பதி) என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் எடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேஷாசலம் என்று பெயர் உள்ளது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிஷபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய எழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.

திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

உலகிலேயே பழமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட தமிழ்ச் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.

இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவிலை தொண்டை மான் என்ற பல்லவ மன்னனால் ஆக்கம் பெற்றதாக கூறப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.விசய நகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

வைணவம் பெரிதாக பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தை சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பரதாயத்தில்ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்த கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. 

ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு மட்டுமல்ல, முகுந்தன் என்ற அடியவருக்கும்… பெருமாள், பொருள் தந்து அருள் புரிந்த திருக்கதை ஒன்று உண்டு!
காஞ்சிபுரத்தில் காஸ்யபன் என்ற ஏழை அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்தது அவர் குடும்பம்.
ஒரு நாள் அவரின் மூத்த மகனான முகுந்தன், ”தந்தையே! நமது வறுமை நீங்க வேண்டும். எனவே, வளம் மிகுந்த காவிரிக் கரையோரப் பகுதிக்குச் சென்று பொருள் திரட்டி வருகிறேன். அனுமதி கொடுங்கள்!” என்றான்.
”பெருமாள் உனக்கு அருள் புரிவார்!” என்று ஆசி கூறி, அவனை வழியனுப்பினார் காஸ்யபன்.
காவிரியாற்றின் கரையில் உள்ள ‘செம்பொன்செய் கோவில்’ என்ற ஊரை அடைந்தான் முகுந்தன். இங்குள்ள கோயிலில் யோகி ஒருவரைச் சந்தித்து வணங்கியவன், அவரிடம் தன் குடும்பத்தின் பரிதாப நிலையைக் கூறி வருந்தினான்.
யோகி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மூல மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். அத்துடன், ”இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபித்து வா. லட்சுமி கடாட்சம் பெருகும்!” என்று அருளினார். இதைக் கேட்டுப் பரவசம் அடைந்த முகுந்தன், கோயிலின் செம்பொன் அரங்கத்தின் முன் அமர்ந்தான். மிகுந்த நம்பிக்கையுடன் நாராயண மந்திரத்தை ஜபிக்கத் துவங்கினான். தொடர்ந்து, மூன்று நாட்கள்… 32 ஆயிரம் முறை மந்திரத்தை ஜபித்து முடித்தான்.
அன்று மாலை! அங்கிருந்து புறப்பட்டவன், குரங்குகள் அதிகம் வசிக்கும் ஒரு வனத்துக்குச் சென்றான் (தற்போது இந்த இடம், ‘குரங்குப்புதூர்’ எனப்படுகிறது). பொழுது இருட்ட ஆரம்பித்தது. பாதை சரியாகப் புலப்படவில்லை; மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு! எனவே, அருகில் இருந்த ஆலமரத்தில் ஏறி, பெரிய கிளையன்றில் படுத்தவன், அப்படியே கண்ணயர்ந்தான்.
இரவு- மூன்றாம் ஜாமத்தில் ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டுக் கண் விழித்தான். ஆலமரத்தின் கீழே திருடர்கள் சிலர், கையில் ஆயுதம் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியபடி நின்றிருந்தனர். அவர்களிடம் விலை உயர்ந்த ஆபரணங்களும் தங்கக் கட்டிகளும் இருந் தன. மரத்தின் மீது இருந்தபடி, அவர்களது செயலை உன்னிப்பாகக் கவனித்தான் முகுந்தன்.
மரத்தடியில் நின்றிருந்த திருடர்கள், ”நாராயண பூதமே விலகி இரு!” என்று ஐந்து முறை குரல் எழுப்பினர். உடனே, மரம் இரண்டாகப் பிளந்து கொள்ள… உள்ளே ஒரு சுரங்கம்! அதனுள் சென்ற திருடர்கள், கொள்ளையடித்த பொருட்களை உள்ளே வைத்துவிட்டு வெளியேறினர். பிறகு, ‘நாராயண பூதமே மூடிக் கொள்’ என்று ஐந்து முறை குரல் கொடுத்தனர். பிளந்த மரப் பகுதி பழையபடி மூடிக்கொள்ள… திருடர்கள், அங்கிருந்து கிளம்பினர்!
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு வியப்பு. அதை அதிகப்படுத்துவது போல் மற்றோர் அதிசயம் நிகழ்ந்தது. ஆம், அவன் முன் காட்சி தந்தார் பெருமாள்!
”முகுந்தா… 32,000 முறை மந்திரம் உச்சரித்தவனே! கீழே இறங்கி, நாராயண பூதத்தை நகரச் சொல்லி, உனக்குத் தேவையான பொன்னையும் பொருளையும் எடுத்துச் செல்வாயாக!” என்று அருளினார்.
உற்சாகத்துடன் கீழே குதித்த முகுந்தன், ”நாராயண பூதமே விலகி இரு” என்று ஐந்து முறை உரக்கச் சொன்னான். மரம், இரண்டாகப் பிளந்து வழி விட்டது. சுரங்கத்துக்குள் சென்று வேண்டிய அளவுக்கு பொன்- பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். பிறகு, ”நாராயண பூதமே மூடிக் கொள்” என்று ஐந்து முறை உச்சரிக்க… மரம், பழையபடி மூடிக் கொண்டது.
மெய்சிலிர்த்த முகுந்தன், கோயிலுக்கு வந்து கண்களில் நீர் வழிய பெருமாளை சேவித்து நன்றி சொன்னான். பின்னர், பொன்- பொருளுடன் காஞ்சிக்குத் திரும்பிய முகுந்தன், அனைவருக்கும் தான- தருமங்கள் செய்து, தன் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்ந்து, முடிவில் வைகுண்டம் அடைந்தான்.
அதுநாள் வரை, ‘தாமோதரன்’ என்ற பெயருடன் திகழ்ந்த பெருமாள்… முகுந்தனுக்கு செம்பொன்னை அள்ளிக் கொடுத்ததால் அன்று முதல், ‘செம்பொன் ரெங்கன்’ என்று திருநாமம் பெற்றார்!