Monday, 7 July 2014

ஏழை பக்தனுக்கு… பொன்னை அள்ளிக் கொடுத்த பெருமாள்!

காஞ்சி- ஸ்ரீஅத்திவரதரின் அருளால், வேகவதி நதிக்கரையில் புதையல் பெற்று, சோழப் பேரரசனிடம் இருந்து சிறை மீண்டவர் திருமங்கை ஆழ்வார்! இவருக்கு மட்டுமல்ல, முகுந்தன் என்ற அடியவருக்கும்… பெருமாள், பொருள் தந்து அருள் புரிந்த திருக்கதை ஒன்று உண்டு!
காஞ்சிபுரத்தில் காஸ்யபன் என்ற ஏழை அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்தது அவர் குடும்பம்.
ஒரு நாள் அவரின் மூத்த மகனான முகுந்தன், ”தந்தையே! நமது வறுமை நீங்க வேண்டும். எனவே, வளம் மிகுந்த காவிரிக் கரையோரப் பகுதிக்குச் சென்று பொருள் திரட்டி வருகிறேன். அனுமதி கொடுங்கள்!” என்றான்.
”பெருமாள் உனக்கு அருள் புரிவார்!” என்று ஆசி கூறி, அவனை வழியனுப்பினார் காஸ்யபன்.
காவிரியாற்றின் கரையில் உள்ள ‘செம்பொன்செய் கோவில்’ என்ற ஊரை அடைந்தான் முகுந்தன். இங்குள்ள கோயிலில் யோகி ஒருவரைச் சந்தித்து வணங்கியவன், அவரிடம் தன் குடும்பத்தின் பரிதாப நிலையைக் கூறி வருந்தினான்.
யோகி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மூல மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். அத்துடன், ”இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபித்து வா. லட்சுமி கடாட்சம் பெருகும்!” என்று அருளினார். இதைக் கேட்டுப் பரவசம் அடைந்த முகுந்தன், கோயிலின் செம்பொன் அரங்கத்தின் முன் அமர்ந்தான். மிகுந்த நம்பிக்கையுடன் நாராயண மந்திரத்தை ஜபிக்கத் துவங்கினான். தொடர்ந்து, மூன்று நாட்கள்… 32 ஆயிரம் முறை மந்திரத்தை ஜபித்து முடித்தான்.
அன்று மாலை! அங்கிருந்து புறப்பட்டவன், குரங்குகள் அதிகம் வசிக்கும் ஒரு வனத்துக்குச் சென்றான் (தற்போது இந்த இடம், ‘குரங்குப்புதூர்’ எனப்படுகிறது). பொழுது இருட்ட ஆரம்பித்தது. பாதை சரியாகப் புலப்படவில்லை; மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு! எனவே, அருகில் இருந்த ஆலமரத்தில் ஏறி, பெரிய கிளையன்றில் படுத்தவன், அப்படியே கண்ணயர்ந்தான்.
இரவு- மூன்றாம் ஜாமத்தில் ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டுக் கண் விழித்தான். ஆலமரத்தின் கீழே திருடர்கள் சிலர், கையில் ஆயுதம் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியபடி நின்றிருந்தனர். அவர்களிடம் விலை உயர்ந்த ஆபரணங்களும் தங்கக் கட்டிகளும் இருந் தன. மரத்தின் மீது இருந்தபடி, அவர்களது செயலை உன்னிப்பாகக் கவனித்தான் முகுந்தன்.
மரத்தடியில் நின்றிருந்த திருடர்கள், ”நாராயண பூதமே விலகி இரு!” என்று ஐந்து முறை குரல் எழுப்பினர். உடனே, மரம் இரண்டாகப் பிளந்து கொள்ள… உள்ளே ஒரு சுரங்கம்! அதனுள் சென்ற திருடர்கள், கொள்ளையடித்த பொருட்களை உள்ளே வைத்துவிட்டு வெளியேறினர். பிறகு, ‘நாராயண பூதமே மூடிக் கொள்’ என்று ஐந்து முறை குரல் கொடுத்தனர். பிளந்த மரப் பகுதி பழையபடி மூடிக்கொள்ள… திருடர்கள், அங்கிருந்து கிளம்பினர்!
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு வியப்பு. அதை அதிகப்படுத்துவது போல் மற்றோர் அதிசயம் நிகழ்ந்தது. ஆம், அவன் முன் காட்சி தந்தார் பெருமாள்!
”முகுந்தா… 32,000 முறை மந்திரம் உச்சரித்தவனே! கீழே இறங்கி, நாராயண பூதத்தை நகரச் சொல்லி, உனக்குத் தேவையான பொன்னையும் பொருளையும் எடுத்துச் செல்வாயாக!” என்று அருளினார்.
உற்சாகத்துடன் கீழே குதித்த முகுந்தன், ”நாராயண பூதமே விலகி இரு” என்று ஐந்து முறை உரக்கச் சொன்னான். மரம், இரண்டாகப் பிளந்து வழி விட்டது. சுரங்கத்துக்குள் சென்று வேண்டிய அளவுக்கு பொன்- பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். பிறகு, ”நாராயண பூதமே மூடிக் கொள்” என்று ஐந்து முறை உச்சரிக்க… மரம், பழையபடி மூடிக் கொண்டது.
மெய்சிலிர்த்த முகுந்தன், கோயிலுக்கு வந்து கண்களில் நீர் வழிய பெருமாளை சேவித்து நன்றி சொன்னான். பின்னர், பொன்- பொருளுடன் காஞ்சிக்குத் திரும்பிய முகுந்தன், அனைவருக்கும் தான- தருமங்கள் செய்து, தன் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்ந்து, முடிவில் வைகுண்டம் அடைந்தான்.
அதுநாள் வரை, ‘தாமோதரன்’ என்ற பெயருடன் திகழ்ந்த பெருமாள்… முகுந்தனுக்கு செம்பொன்னை அள்ளிக் கொடுத்ததால் அன்று முதல், ‘செம்பொன் ரெங்கன்’ என்று திருநாமம் பெற்றார்!

No comments:

Post a Comment